அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில்

0
2449

வேளச்சேரி என்னும் திருஊர் மருதநில ஊராகும். செங்கற்பட்டு மாவட்டம் பிரிந்து காஞ்சி மாவட்டம் தோன்ற வேளச்சேரியில் அம்மாவட்டத்தின் ஒரு பகுதியானது மருத நில வகைகள் கா, குடி, சேரி,புரம், புரி, வயல் என சொற்கூறு முடிவதாய் அமைந்திருந்தது. சேரி எனப்படும் பகுதி ஊர்ப்புறத்து வெளிப்பகுதி என்பது ஆகும். நற்றிணையின் பாடல்களில் கூறப்படும் சேரி என்பது குடியிருப்புகள் எனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

வாலிழை மகளிர்  சேரித் தோன்றும் எனவும், “மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி எனவும் தமர்கம் அறியாச்சேரி” என்ற நற்றினை அடிகளால் “ஊரும் ஊர் தொடர்ந்த குடியிருப்பும் சேரி” என அழைக்கப்பட்டுள்ளது. தெளிவாகவே விளக்கம் கிடைக்கின்றது. இந்த வகையில் வேளச்சேரி என்பது வேள்விச் சேரி­­ என்றும்,   ஊரின் வெளிச்சேரி என்பது மறுவியதால் வேளச்சேரி எனவும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையின் ஒரு பகுதியாகி (600 042) கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து திருவல்லிக்கேணி. திருமயிலை வழியாக மின்சார இரயில் தொடர்பு உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. அருகில் ஆலயம் அமைந்துள்ளது. தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு அடிக்கடி பேருந்து வசதிகளும் உள்ளது.

இராஜ கோபுரம்

இரண்டு பிரகாரங்களை கொண்டுள்ள அருள்மிகு தண்டீஸ்வரர் ஆலயத்தின் இராஜகோபுரம் தெற்கு வாயிலில் அமைந்து பிரதான வாயிலாக உள்ளது. 1973-ல் உருவாக்கப்பட்ட இந்த கோபுர வடிவம் சிலைவடிவங்கள் ஏதுமின்றி ஐந்து நிலைகளை கொண்டதாக திகழ்கிறது. கோபுர உச்சியில் பஞ்சாட்சர யோகம் கொண்டதாக ஐந்து கலசங்கள் அமையப்பெற்றுள்ளது. எங்கிருந்து நோக்கினும் ஆலயத்தின் இருப்பிடம் அறியும் பொருட்டு இராஜ கோபுரம் காட்சி அளிக்கிறது. 11.11.1973ல் இராஜகோபுர கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மதில்கள்

ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள இரு பிரகாரங்கள் உள்ளடக்கி சுற்று மதில் சுவர் அமையப் பெற்று கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சிறிய கோபுரங்களுடன் கூடி வாயில்கள் இருந்தாலும் இராஜகோபுர வாயிலே ஆலய வருகைக்கு பயன்படுகிறது.

இரண்டாம் பிரகாரம்

ஆலயத்துள் நுழைந்ததும் இரண்டாம் பிரகாரம் தூய்மையுடன் பயன்படுகிறது. தெற்கு வாயிலின் வழியாக உள் நுழைகையிலே அலங்கார மண்டபத்தையடுத்து வேத விநாயகர் சன்னதி உள்ளது. திருவாயில் நுழைவிலிருந்து இடப்புறம் திரும்புவோமானால் உள்சுற்றின் தென்புறம் வேத விநாயகர், அறுபத்தி மூவர் நாயன்மார்களின் திருஉருவமும் தொகையடியார்கள் திருஉருவமும் சேக்கிழார் திருஉருவமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு 22.08.2003-ல் முறையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்புரத்து தென் மூலையில் ஆலய அலுவலகம் அமைக்கப் பெற்றுள்ளது. அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

வட பகுதியில் விநாயகர், சுப்பிரமணியருடன் லிங்கத் திருமேனியும், அடுத்து வைத்தீஸ்வரர் வில்வ மரத்தடியிலும் காணப்படுகிறார். சிறு சந்நதியில் சொக்கநாதரும், மீனாட்சி அம்மையும் அமைந்து காட்சி தருகின்றனர். வெளிப்பிராகாரத்து ஈசானிய மூலையில் 1959-ஆம் ஆண்டு நவக்கிரகங்கள் பக்தர்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து நாகேஸ்வரருக்கான சன்னதி அமைந்துள்ளது. துவஜஸ்தம்பம் 1968-ம் ஆண்டில் பிரதிஷ்டைசெய்யப்பட்டு குடமுழக்கு செய்யப்பட்டது. ஆலய அக்னி மூலையில் மடப்பள்ளியும் அருகே யாகசாலையும் அமையப் பெற்றுள்ளது.

மண்டப முகப்புகளில் முருகப்பெருமான் அழகு உருவ கதை வடிவமும் நந்தி, ரிஷபம் போன்ற உருவங்களும் எழிலுடன் காண்பதற்கு மனநிறைவைத் தருகிறது.

கிழக்குதிசை நோக்கி அருள் தரும் தண்டீஸ்வரர் கருவறை முன்பாக அமையப் பெற்றுள்ள நந்தி தேவரின் பின்புறம் துவஜஸ்தம்பம் அமைந்துள்ளது. கொடி மரத்தின் நீள்வடிவம் உருத்திரனுக்கு உரியது. எண்கோண வடிவம் விஷ்ணுவாகவும், கீழ்ப்பகுதி பிரம்மஸ்தானம் எனவும் அமையப்பெற்றது.

ஆயபதிதான் அருட் சிவலிங்கம்

ஆய பசுவும் ஆடல் எறு என நிற்கும்

ஆய பலிபீடம் ஆகு நற் பாசமாம்

ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்க்கே  (திருமூலர்)

முதல் பிரகாரம் ஆலயமும்

ஆலய மூலவர் திருவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வாயிலின் வெளிப்புறத்தில் விநாயகரும் முருகப்பெருமானும் சிறு சந்நதிகளில் இடம் பெற்றுள்ளனர்.

வாயிலின் உட்புறம் நுழைந்ததும் ஜோதியாய், சுடராய், ஒளிதரும் பிழம்பாய் காணும் போதே உள்ளம் களிக்கும் வண்ணம் காட்சி தரும் அருள்மிகு தண்டீஸ்வரரின் அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் இடம் பெற்றுள்ள துவாரபாலகர்களின் அழகு சொல்லில் அடங்காது உள்ளது.

தலையில் மகுடமும், கழுத்தில் ஹாரமும், காதில் குண்டலங்களும் தோளில் சிறப்பு வளையங்களும் ஆடையழகுடன் அமைந்தும் ஒரு காலை நேராக ஊன்றிய வண்ணமும் மறுகாலை மடித்தும், இடதுபுற துவாரபாலகர் வாட்படையுடனும் வலப்புற துவார பாலகர் கதையையும் ஏந்தி கம்பீரமாக காட்சி தருகின்றனர்.

அர்த்த மண்டபத்தினுள்ளும், விநாயகரின் திருஉருவம் அக்ரின, உயர்வின, பூத வடிவங்கள் ஒருங்கிணைந்த திருஉருவமாக அமைந்துள்ளது. ஐந்து கரங்கள் கொண்டவரான விநாயகர் மோதகம், தந்தம், நீர்க்கலசம், அங்குசம், பாசம் எனும் ஆயுதங்களையும் தாங்கி கிரௌஞ்சனை அடக்கி அவனையே ஏற்று காட்சி தருகிறார். அர்த்த மண்டப நுழைவாயில் அடுத்த பகுதியில் வள்ளி தெய்வானை சமேதராய் முருகப் பெருமான் காட்சி மெயிசிலிர்க்க வைக்கிறது. மேல் நோக்கிய கைகளில் வேல், வஜ்ராயுதங்கள் இருக்க வரத, அபய முத்திரைகள் காட்டும் வண்ணம் கேயூரம், ஹாரம் போன்ற ஆபரணங்கள் தாங்கி இருக்க, வலது புற இச்சாசக்தி வள்ளியம்மை, வலதுகால் நேராக நிற்க இடது காலை சற்று சாய்த்தவாறும் வலது கையில் கீழ் நோக்கி தொங்குமாறு இடது கரத்தில் தாமரை மலர் ஏற்றுள்ளார்.

இடதுபுற கிரியாசக்தி தெய்வயானை வலது கரம் நீலோற்பலம் தாங்கி இடது கரத்தை கீழாக தொங்கவிட்டும் இடது கால் ஊன்றிய தேர் நிலையும் சிறிது சாய்ந்த வலது கால் வடிவம் கொண்டு காட்சி தருகின்றார். கருவறை ஈசனைக் கண்ணாரக் கண்டு தொழ, செய்த வினையாவும் தீர்ந்து புனிதம் காணும் பஞ்சாட்சரம் ஜெபித்து துதிக்கும் நிலை நமக்கு உடனே கிட்டும்.

கருவறை 13 அடி வெளிப்புறமும் ஆறரை அடி உட்புறமும் அமைந்துள்ளது. கடைக்கால் பகுதி பூமியில் அமிழ்ந்தது நிற்க உபநீடம், அதிஷ்டானம், ஆகியவையும் உபானம், ஜகதி, குமுதம், பட்டிகை, வேதி ஆகியவைகளும் அமைந்துள்ளது. அதிஷ்டானத்திற்கு மேல் தூண்கள் உருவான கால்பகுதியும் கோஷ்ட பஞ்சரங்கள் எனும் மடங்களும் இதன் மேல் கீரிடம், சிகரம் எனும் பகுதிகள் இடையே கபோதம், கர்ண கூடுகள், சாலைகள் ஆகிய அலங்கார அடுக்கும் உச்சியில் ஸ்தூபியும் அமையப் பெற்றுள்ளது.

கருவறை விமானத்தின் மேற்பகுதியில் சிவபெருமானின் அமர்ந்த திருமேனியும், சாமரம் வீசும் பணிப்பெண்கள், தேவதைகள், கதை வடிவில் அமைந்துள்ளது.