About Mylapore

திருமயிலையின் சிறப்பினை அறிவோம்

0
2576

திருமயிலையின் சிறப்பினை அறிவோம்

திருமயிலை என்று பெயர் வரக் காரணம் அம்பாள் மயில் வடிவம் கொண்டு கபாலீஸ்வரரைப் பூஜித்து வழிப்பட்டதால் இந்த ஊர் மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று தொடங்கிய குறளில் உலக தத்துவங்கள் அனைத்தையும் எடுத்து சொன்னவர். உலக இலக்கிய அரங்கில் தமிழர்களுக்கு பெருமையை தேடி தந்தார். மனிதனின் வாழ்வில் ஒற்றுமையுடனும் இன்பமுடனும் இசைவுடனும் வாழ தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்கினார். அய்யன் திருவள்ளுவர் திருமயிலையில் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. உலகத்திலேயே மயிலாப்பூரில் மட்டும்தான் திருவள்ளுவர் திருக்கோயில் உள்ளது. அவர்கள் இவ்விடத்தில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. அது மட்டும் இன்றி முதல் ஆழ்வார்களில் மூவரில் முக்கியமானவராக வணங்கப்படும் தமிழ்த் தலைவன் என்று அழைக்கப்படும் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தவர். இவர் நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதியை அருளியவர். பேயாழ்வார் தான் முதலில் திருமாலைக் கண்டார் பரமனைக் கண்ட பரவசத்தில் திருகண்டேன் பொன்மேனிக் கண்டேன் திகழுமருக்கனனி நிறமுங் கண்டேன் என்று துவங்கி பெருமாளைப் பற்றி நூறு பாடல்கள் பாடினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமயிலையில் சிவனேசன் என்று பெயருடைய சிவ பக்தன் ஒருவர் இருந்தார். அவர் எம்பெருமானினும் மெய்ப் பொருளையே ஆராய்ந்து அறியும், ஆற்றல் மிக்க அருந்தவத்தை உணர்ந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு பூம்பாவை என்னும் பெயருடைய மகள் இருந்தாள். சிவனேசர் திருஞான சம்பந்தரை மனதிலே தியானித்து கடவுள் என கருதி வந்தார் . பொன்னையும், பொருளையும் அருமை மகளையும், தன்னையும் ஞானசம்பந்தருக்கே அர்ப்பணம் செய்ய உறுதி கொண்டார். சிவனேசர் மகள் பூம்பாவை ஒரு நாள் மலர் பறிக்க சென்றுயிருந்தாள். அப்போது அரவம் ஒன்று தீண்டிவிட்டது. சிவனேசர் விஷத்தை நீக்க வைத்தியம் எல்லாம் செய்தும் அனைத்தும் பலிக்காமல் பயனற்று போயின. அதனால் பூம்பாவை பூவுலகை விட்டு மறைந்தாள். துயரத்தில் ஆழ்ந்தார் சிவனேசன். தகனம் செய்யப்பட்ட மகளின் எலும்பையும், சாம்பலையும் ஒரு குடத்தில் வைத்து காப்பிட்டார். இச்சமயம்தான் திருஞானசம்பந்தர் திருமயிலைக்கு எழுந்தருளினார். அவரை சிவனேசர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். ஞானசம்பந்தர் திருமயிலையில் எழுந்தருளியிருக்கும் அருள் தரும் அம்பிகை கற்பகாம்பாளையும் கருணைக் கடலான கபாலீஸ்வரரையும் போற்றி வணங்கினார். சிவனேசருக்கு ஏற்பட்ட சோகத்தை அறிந்த ஞானசம்பந்தர் சிவனேசரிடம் உம்முடைய மகளின் சாம்பலும், எலும்பும் நிறைந்த குடத்தை கொண்டு வருக என்று கூறினார். சிவனேசர் குடத்தை எடுத்து வந்து ஞானசம்பந்தர் முன்னால் வைத்தார். சம்பந்தர் கபாலீஸ்வரரை பணிந்தவாறு மட்டிட்ட புன்னையைக் காணல் மடமயிலை என்னும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார். பின்னர் சமணரைக் குறிப்பிட்டு பாடி முடித்ததும் குடம் உடைந்து பூம்பாவை பேரழகு மிக்க வடிவோடு எழுந்து நின்றாள். பூம்பாவை இறைவனை வழிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடியை வணங்கினாள்.

இது மட்டுமின்றி திருமயிலையில் ஏசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி. 52-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்திருந்தார். அவர் சென்னையில் மதப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் அவர் உயிர் தியாகம் செய்ததாகப் கூறப்படுகிறது. அவர் கட்டிய சிறிய கோவிலில் அவர் உடலை அடக்கம் செய்த இடத்தில் சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டது. இப்படி பேரும் புகழும் சிறப்பும் மிக்க திருமயிலையில் ஏழு சிவாலயங்கள் உள்ளது. இந்த சிவாலயங்கள் தீர்த்தபாலீஸ்வரர், விருப்பாட்டீஸ்வரர், மல்லீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், கபாலீஸ்வரர் ஆகிய சிவாலயங்களை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய தரிசனம் கயிலை யாத்திரைக்கு சமம் என பெரியவர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆகையால் திருமயிலையை மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்று கூறுகிறார்கள்.