திருமையிலையின் பெருமைகளை கூறிக் கொண்டே போகலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலையில் ஏழு சிவாலயங்களை காண்போம்..
கபாலீஸ்வரர் திருக்கோயில்:

சிறப்பு பெற்ற மைலாப்பூரை மயிலையே கயிலை கயிலையே மயிலை என்று அழைப்பது அனைவரும் அறிந்ததே. மைலாப்பூர் ஒரு காலத்தில் அழகிய கடல் சார்ந்த பட்டினமாக விளங்கியது. வங்கக் கடல் அலைகள் தொட்டு விட்டுச் செல்லும் தூரத்தில் கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் எழுந்தருளி அனைவருக்கும் அருள்புரிந்து கொண்டிருந்தார். அந்த காலத்தில் சோலைகள் நிறைந்த இந்த கடலோரப்பட்டினத்தில், பூஞ்சோலைகளுக்கு பஞ்சமே இல்லையாம். பூஞ்சோலைகள் என்றாலே பாடும் குயில்களுக்கும், ஆடும் மயில்களுக்குமான ஆடும் உறைவிடம் என்பதுதானே அர்த்தம். அதிலும் மயில்கள் அதிகமாக இங்கு வாழ்ந்ததால் இவ்வூர் வழியே செல்பவர்கள் இந்த ஊரை மயில்கள் ஆர்ப்பரிக்கின்ற ஊர் என்றே அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர் . இதுதான் பிற்காலத்தில் மயில்ஆர்ப்பு+…. மயிலாப்பூர் என மருவியது. பெருமாட்டி மயில் உருவில் ஆண்டவனை வழிபட்டதாலும் இவ்வூருக்கு இப்பெயர் வந்தது எனவும் கூறுவர். புன்னை மரம் இக்கோவிலின் ஸ்தல விருட்சமாக உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.
வெள்ளீஸ்வரர் திருக்கோயில்:

காமாட்சி உடனுறை வெள்ளீஸ்வரர் கோவிலுக்குள் செல்லும் போதே பிரம்மச் சாரியான விநாயகர் சித்தி, புத்தி, சரபேஸ்வரருக்கு அருகிலேயே, அவரை தினம் வழிபடும் பொருட்டு, சனி பகவானும் எழுந்தருளியுள்ளரர் . சரபேஸ்வரரை வழிபட்டுக் கொண்டிருக்கும் சனி பகவான் தன்னை வழிபடுபவருக்கு நன்மையே செய்வார் என்ற நம்பிக்கையில் இங்கு ஞாயிறு தோறும் சரபேஸ்வரரையும், சனீஸ்வரரையும் வழிபட மக்கள் கூடுகின்றனர்.
வாமனனாக அவதரித்த திருமால் 3 அடி மண்னை தானமாக மகாபலியிடம் கேட்க அவரும் தானமாக கொடுத்தார். உலகத்தை அளக்கும் போது வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த நவ கிரகங்களின் ஒருவரான வெள்ளி என சொல்லப்படும் அசர குரு சுக்ராசாரியார் தானத்தைத் தடுக்கும் பொருட்டு, நீர் வார்த்து தானம் செய்யும் போது, நீர்வராமல் தடுக்கும் பொருட்டு சுக்கிரன் வண்டாக மாறி தண்ணீர் வரும் பாதையை அடைத்துக் கொண்டார். இதை அறிந்த திருமால் தர்பை புல்லினால் நீர்வரும் பாதையை குத்த சுக்கிரனுக்கு ஒரு கண் போய் விட்டது. பறிபோன கண்ணை திரும்ப பெற மயிலாப்பூருக்கு வந்து இறைவனை வழிபட்டு கண் பெற்றார் என்பது ஸ்தல புராணம். வெள்ளி என்கிற சுக்கிரன் பூஜை செய்ததால் வெள்ளீஸ்வரர் என்ற திருப்பெயர் பெற்றுள்ளார்.
மல்லீஸ்வரர் திருக்கோயில்:

மல்லீஸ்வரர் கோவில் அக்காலத்தில் மல்லிகை வனமாக சோலை நிறைந்த மல்லிகைச் செடி ஒருங்கே அமைந்து மல்லிகை மணமாய் காட்சி அளித்ததால் மல்லீஸ்வரர் என்று வரலாறு கூறுகிறது. இங்கு அருள்மிகு மரகதாம்பிகையுடன் மல்லீஸ்வரர் அருள் பாலிக்கின்றார். மாசி மாதத்தில் ஆண்டுதோறும், குறிப்பிட்ட நாட்களில் காலையில் உதிக்கும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இக்கோவிலின் கருவறையில் உள்ள, சிவபெருமானின் மீது நேரடியாக விழும் அற்புதத்தை காணலாம். பக்தகோடிகள் தங்கள் குடும்ப நலனிற்காகவும், நட்புறவின் நெருக்கத்திற்காகவும், திருமணம் ஆகாதவர்கள் திருமணம் வேண்டியும் இக்கோவிலுக்கு வருகின்றனர்.
விருப்பாட்டீஸ்வரர் கோயில்:

அருள்மிகு விசாலாட்சி உடனுறை விருபாட்டீஸ்வரர் திருக்கோவிலில் பசுவும் கன்றும் சேர்ந்து இங்கு பூஜை செய்ததாகவும் அதனைக் கண்ட ஒரு பக்தர் இத்திருக்கோவிலை எழுப்பியதாகவும் கூறுவர். இவ்வாலயத்தில் வழிபடும் பக்தர்களின் விருப்பம் நிறைவேறுவதால் விருபாட்டீஸ்வரர் என்று பக்தர்களால் அழைக்கபடுகிறது. தனது தவத்தை கலைத்த மன்மதனை நெற்றிக் கண்ணை திறந்து எரித்த சிவ பெருமான் இத்தலத்தில் மூன்று கண்களுடன் காட்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்க செய்தி. இவ்வாலயத்தில் அன்னை சன்னதி அருகே எழுந்தருளியுள்ள கால பைரவரை பக்தர்கள் திருமணத் தடை நீக்குவதற்கும், குழந்தை பாக்கியத்திற்காகவும் வணங்கி வழிபடுகிறன்றனர்.
தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில்:

தீர்த்த பாலீஸ்வரர் திருக்கோயிலில் முன் காலத்தில் இந்த கோவிலை சுற்றி அறுபத்து நான்கு தீர்த்த குளங்கள் இருந்ததாகவும், இங்கு கோவிலுக்கு சற்று தொலைவில் கடல் இருப்பதாலும் தீர்த்தங்களை பரிபாலனம் செய்யும் ஈஸ்வரர் தீர்த்த பாலீஸ்வரர் என்றும் அக்காலத்தில் ஒரு சமயம் அகத்திய முனிவருக்கு கடும் நோய் எற்பட்டது. தன் நோய் நீங்கிட இறைவனை அருள்பாலிக்குமாறு இறைஞ்சினார். இறைவனும் கருணைக் கொண்டு அகத்திய முனிவர் நோய் நீங்கிட அருள்பாலித்தரர். தீர்த்தத்தைக் கொடுத்து நோயை நீக்கியதால் இங்கு உறையும் ஈஸ்வரர் தீர்த்த பாலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மாசி மகத்தீர்த்த வாரித் திருவிழாவின் போது, சமுத்திர தீர்த்தத்தில் இவ்வாலய இறைவன் முதன்மையாக தீர்த்தம் பாலித்த பின்னரே ஏனைய சிவாலயங்கள் தீர்த்தம் பாலிப்பது வழக்கமாக இருப்பதாலும் கூட இப்பெயர் பெற்றுள்ளதாக கூறலாம்.
காரணீஸ்வரர் திருக்கோயில்:

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கும் அருள்மிகு காரணீஸ்வரர் தனது உமையாள் பொற்கொடி அம்மனுடன், இதே மயிலையில் காட்சி தருகிறார். காரணீஸ்வரர் திருக்கோவில் என அழைக்கப்படும் சிவபெருமான் உலகில் நடக்கும் ஒவ்வோர் விஷயத்திற்கும் ஓர் காரணம் உண்டு. அத்தனை காரணத்திற்கும் இறைவன் தான் காரணம் என்பதை உணர்த்தும் ஈஸ்வரன் காரணீஸ்வரர். இந்த திருத்தலத்தில் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணை ஆகியவற்றை சம அளவில் கலந்து விளக்கு ஏற்றி இறைவனை வலம் வழிபட்டு வந்தால் குறைகள் தீர்ந்து நலம் பெறலாம்.
வாலீஸ்வரர் கோயில்:

பெரிய நாயகி அம்மன் உடனுறை வாலீஸ்வரர் திருக்கோவில் ராமாயண புரானத்தில் வரும் வீரர்களில் ஒருவரான வாலி திருமயிலையில் உள்ள இவ்வாலயத்தில் பூஜை செய்து இறைவனிடம் அருள் பெற்ற இந்த திருத்தலம் வாலீஸ்வரர் திருக்கோவில் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், காசிக்கு அடுத்தாற்போல் மிகச் சிறப்பாக பஞ்சபூதங்களுக்கு ஒப்பாக ஐந்து லிங்கங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. மகா சிவராத்திரி அன்று இந்த ஐந்து லிங்கங்களை தரிசிப்பது மிகவும் விசேஷம்.
