ஸ்ரீ வைகுண்டநாத திருக்கோயில் நவதிருப்பதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தலம் திருநெல்வேலியிலிருந்த திருச்செந்தூருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. வைகுண்ட நாதர் கற்பகிரகத்தில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அர்த்த மண்டபத்தில் கள்ளபிரான் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார்.
சோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து வேத சாஸ்திரங்களை திருடி சென்றான். இதனால் படைப்பு தொழில் நின்று போனது. வருந்திய பிரம்மன் மகாவிஷ்ணுவை வேண்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் சோலைகள் நிறைந்த இடத்தை தேர்வு செய்து பிரம்மன் அங்கு வந்து கடுந்தவம் செய்து திருமால் நேரில் அங்கு வந்து பிரம்மனை வாழ்த்தி இழந்த ரகசியத்தை மீட்டுக் கொடுத்தார். திருமாலிடம் பிரம்மன் தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்தில் இங்கு வைகுண்டநாதர் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
கால தூஷகன் என்னும் கள்வன் ஒருவன் ஸ்ரீ வைகுண்டத்தை அடுத்த காட்டில் வாழ்ந்து வந்தான். அவன் கள்வனாக இருந்தாலும் ஒரு சில அர நெறிகளை வகுத்து அதன்படியே செய்து வந்தான். அவன் இப்பெருமானை வழிபட்டு திருடச் செல்வானாம். திருடிய செல்வத்தில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வருவதை வழக்கமாக கொண்டான். ஏழை எளிய மக்களுக்கும் தானமாக அளித்து விடுவான்.
இவன் கூட்டத்தினர் அரண்மனையில் திருடுகையில் பிடிபடும் பொழுது கால தூஷகன் வைகுண்ட நாதனிடம் சரண் அடைந்து தன்னை காக்குமாறு வேண்ட பெருமாளே காலதூஷகன் வேடத்தில் எதிரில் வர, காலதூஷகனை அரசன் பார்த்த போது தன் சுயரூபத்தை காட்டியருள, அடிபணிந்து நின்ற மன்னன் தன்னிடம் கொள்ளையடித்து செல்ல வேண்டிய காரணம் கேட்க தர்மம் காக்காத உன்னை தர்மத்தில் ஈடுபட செய்யவே நான் வந்தேன் என்றார். மன்னனும் இறைவனின் ஆணை படி நடந்து கொண்டார். கள்ளபிரான் அழகில் மயங்கி அவன் கன்னத்தை கிள்ளினான். அதனால் கள்ளபிரனுக்கு கன்னத்தில் குழி ஏற்பட்டது. இதன் காரணமாக கள்ளன் என்ற பெயரும் கள்ளபிரான் என்ற பெயரும் உண்டாயிற்று.
இக்கோவிலின் அமைப்பு முழுவதும் சில காலத்திற்கு முன் பூமியில் புதையுண்டு போனது, பின்னர் மணப்படை வீட்டை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னனின் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்ப்பது வழக்கம். இதில் ஒரு பசு மட்டும் தனித்து பெருமாள் பூமியில் மறைந்து உள்ள இடத்தில் பால் சொறிவதை வழக்கமாக கொண்டிருந்தது. இதனை மேய்ப்பவன் மன்னனிடம் கூற மன்னன் தனது பரிவாரங்களுடன் அங்கே வந்து புற்று மணலை அகற்ற அங்கே வைகுண்ட பெருமாள் சன்னதியை கண்டு ஆனந்தித்து இப்பொழுதுள்ள கோவிலை அமைத்தார்.
கோவில் அர்த்தமண்டபத்துடன் இணைந்து மகாமண்டபம் காணப்படுகிறது. மகாகமண்டபத் தூண்களில் சிங்கம் வாழைப்பூ போதிகையைச் சுமந்து நிற்பதைக் காணலாம். மண்டபம் மணிவாயில் மண்டபம் என்றழைக்கப்படுகிறது. கருட மண்டபத்தைச் சுற்றியுள்ள நான்கு மூலைகளிலும் ஸ்ரீபலி மண்டபம் அமைந்துள்ளது. இதன் தென்மேற்காக வைகுந்த வல்லி நாச்சியார் சந்நிதி வீற்றிருக்கின்றாள். சுற்றின் வடமேற்கு ஓரத்தில் சோரநாத நாயகியின் சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் சோரநாத நாயகி சாளக்கிராமத் திருமேனி உள்ளது.
வாயிலுக்கு நேராக கொடிமரம் மற்றும் பலிபீடம் காணப்படுகிறது. வாயிலின் மேல் ஐந்து நிலைக் கோபுரம் உள்ளது. பரமபதவாயிலின் மேல் சிறிய கோபுரம் ஒன்று காணப்படுகிறது. நரசிம்மவாதாரக் காட்சிகள் பல அங்கு காணலாம். கோயிலினி வெளிப்பிரகாரத்தில் கொடிமரம் உள்ளது. அதன் வடபுறமாக தொற்கு நோக்கி திருவேங்கடமுடையான் மண்டபம் உள்ளது. மண்டபத்தின் இருபுறமும் மூன்று வரிசைகளில் மண்டபம் காணப்படுகிறது.
