மோட்சத் தலம் என்னும் குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்

0
1286

கோயம்பேட்டில் அமைந்திருக்கும் அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் ஒரு காலத்தில் வால்மீகி முனிவர் ஆசிரமமாக இருந்தது. அங்கே லவன் – குசன் என்ற தன் குழந்தையுடன் சீதை வாழ்ந்தாள். வனவாசம் முடிந்து இராவணனுடன் போரிட்டு வெற்றி அடைந்தாயிற்று. சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பியாயிற்று. பட்டாபிஷேகமும் நடந்தாயிற்று. இவ்வளவுக்கு பிறகு நாட்டு மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆசைப்பட்டார் ராமர். ஒரு ஒற்றனை அழைத்தார். ‘நாடு நகரம் முழுவதும் சுற்றிவா, மக்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து வா” என்றார். புறப்பட்டு போன ஒற்றன் சில நாட்கள் கழித்து திரும்ப வந்தான். ‘சொல்….  மக்கள் என்ன நினைக்கிறார்கள்”  என்று கேட்டார்  ராமர்.

 ‘சுவாமி அது ஒரு துணி வெளுக்கும் தொழில் செய்யும் குடும்பம். மனைவி ஒரு நாள் இரவு நேரத்தில் சூழ்நிலை காரணமாக தன் கணவனைப் பிரிந்து வெளி இடத்தில் தங்க நேர்ந்தது. மறுநாள் காலையில் கணவனிடம் திரும்பி வந்தாள். அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.  அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் ஒன்றும் ராமன் இல்லை. பல நாட்கள் தன்னை விட்டுப் பிரிந்திருந்த சீதையை அவர்  சேர்த்துக் கொணடது போல் உன்னை சேர்த்துக் கொள்ள நான் தயாராக இல்லை” என்றான். குடிமகனின் குரலுக்கு மதிப்பளிக்க எண்ணி ராமர், தனது சகோதரன் லட்சுமணனை அழைத்து, ‘சீதையை அழைத்துப் போய் காட்டில் விட்டு வா” என்று கூறினார்.

அன்று சீதை காட்டில்  விடப்பட்டார்.  அந்த காட்டில்  வால்மீகி முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். நிஷ்டையில் இருந்த அவர் கானகத்தின் அசைவுகளைக் கொண்டே மனித சஞ்சாரம் நிகழ்ந்துள்ளதை அறிந்து கொண்டார்.  சீதையைக் கண்டார். அவள் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்து, உடனே தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார்.  சீதையின் புதல்வர்களான லவன் – குசன் என்கிற இரு குழந்தைகளும் காட்டிலேயே வளர்ந்து அவர்கள் ஞானக்கல்வியும், வீரக் கல்வியும் கற்றனர். ஒருநாள் கம்பீரமாக குதிரை ஒன்றுடன் சில வீரர்கள் காட்டைக் கடக்க முயன்ற போது அவர்களை லவனும் – குசனும் தடுத்து நிறுத்தினர்.

‘இது அஸ்வமேத யாகத்திற்காக தன்னை வெற்றிகொள்ள யாருமில்லை என்பதை அறிவிக்கும் விதமாக ஸ்ரீராமர் அனுப்பி வைத்த குதிரை” என்றனர் வீரர்கள். ’அட அப்படியா? என்று ஆச்சரியப்பட்ட சகோதரர்கள், அந்த வீரர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி விட்டு,  குதிரையைப் பிடித்து கட்டி வைத்தனர். குதிரையை மீட்க வந்தவர்களை லவ குசர்கள் தோற்கடித்து விரட்டினர்.  அனுமான் வந்து விஸ்வரூபமாய் நின்றார். அவரை ராமநாமம் சொல்லி இயல்புக்கு வரவழைத்து தியானத்தில் மூழ்கடித்து வீழ்த்தி விட்டனர். கடைசியில் ராமரே வந்தார். வந்திருப்பது யார் என்பதை அறியாத லவ குசர்கள் அவரை எதிர்த்து உக்கிரமாய் போரிடவே தகவல் வால்மீகிக்கு போனது.

ஒடோடி வந்து அவரிடையே புகுந்து சமாதானம் செய்து வைத்ததுடன் ஒருவருக்கு ஒருவர்  அறிமுகம் செய்து வைத்தார். தந்தையை எதிர்த்து போரிட்ட காரணத்தால் லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க வழி கூறுமாறு வால்மீகியிடம் வேண்டினார் லவ-குசர்கள். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும் என்றார் முனிவர். அதன்படி தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர். லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்று பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் ஸ்ரீசரபேஸ்வரர்  காணப்படுகிறார். சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர்.  இத்தலத்தை ‘ஆதிபிரதோஷத்தலம்” என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள். கோயிலின் பிரதான அர்த்தமண்டபம் 40 தூண்களுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதில்தான் குசலவபுரிஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சுவாமி சன்னதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சன்னதியும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. கோயில் நந்தவனத்தில் இரு வில்வ மரங்களுக்கு இடையே வேப்ப மரம் ஒன்று பிணைந்து இணைந்து நிற்கின்றது. அரிய அமைப்பிலான இந்த விருட்சங்களை வழிபடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.