அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்

0
2259

தொண்டை நாட்டுத் திருக் கோயில்களில் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்றாகும். வால்மீகி முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டமையால் இத்தலம் திருவான்மியூர் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தில் தேவர்கள் திருப்பாற் கடலைக் கடந்து அமுதம் பெற்று அவ்வமுதத்தால் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தனர். அதன் காரணமாக இத்தலத்தை அமிர்தபுரியென்றும் அழைப்பர். இறைவன் பெயர் மருந்தீஸ்வரர்.

இங்கு காட்சியளிக்கும் லிங்கம் வெண்ணிறம் கொண்டு காணப் படுவதால் பால் வண்ண நாதர் என்னும் பெயருடனும் வழங்கப்படுகிறது. இத்தலத்து லிங்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் லிங்கத்தின் தலையில் மாட்டுக்குளம்பு பதிந்தும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் காமதேனு லிங்கத்தின் மீது பால் சொறிந்த போது இத்தழும்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தலத்தின் மேல் வீதியில் வால்மீகி முனிவரின் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவியின் பெயர்  சொர்க்க நாயகியாகும். திரிபுர சுந்தரியென்ற பெயரும் வழங்கப்படுகிறது.

இக்கோயிலின் மூலஸ்தானம் மேற்குதிசை நோக்கி அமைந்துள்ளது. கிழக்குப் புறமாக கோபுர வாயில் காணப்படுகிறது. இராசேந்திர சோழன் இவ்விறைவனை தரிசிக்க அடிக்கடி விஜயம் செய்வதுண்டாம், இறைவன் குடி கொண்டிருக்கும் கர்ப்பக்கிருஹம் யானையொன்று படுத்துக் கிடப்பது போன்று காட்சியளிக்கும் இது சோழர்கால கட்டடக் கலையாகும் கர்ப்ப கிருஹத்தில் சோழர் கால சிற்பங்கள் காணப்படுகின்றன. இத்திருக்கோயிலில் 108  லிங்கங்கள் உள்ளன.

இத்திருத்தலத்தின் கிழக்குக் கோபுரவாயிலின் நேர் எதிராக முருகப் பெருமாள் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வலப்புறமாக மூத்த பிள்ளையார் காட்சியளிக்கின்றார். அம்பிகையின் கோயில் கோபுரவாயில் வழி உள்ளே நுழைந்ததும் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. சொர்க்கநாயகி தெற்கு நோக்கிக் காட்சியளிக்கின்றார். அம்மனின் முன்பாக சிங்கம் உள்ளது.

அம்பிகையின் கோயிற் கருவறைச் சுவர்களில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. எதிராக நாலுகால் மண்டபம் உள்ளது. மண்டப மேற்காக தியாகராசப் பெருமாள் காட்சியளிக்கின்றார். வடபுறம் உள்ள திருவாயில் வழி சென்றால் மருந்தீசர்  சந்நிதியை அடையலாம்.

மருந்தீசர் கறைவறையினுள் மேற்கு நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். தலவாயிலுகடகு நர் தென்முகமாக அம்பலவாணார் காட்சியளிக்கின்றார் மற்றும் விநாயகர், முருகப் பெருமான் சண்டேசுவரர், கங்காளநாதர், தட்சிணாமூர்த்திகளும் காணப்படுகின்றர். தவிர கொடிமரம் பலிபீடம், மேலக் கோபுரம், மேலைக் கோபுரவாயில் ஆகியன வரிசையாக அமைந்துள்ளன. தல விருட்சம் சமான வன்னிமரம் வடக்குப் பிரகாரத்தில் அமைந்துள்ளன. வசந்த மண்டபமும் காணப்படுகிறது.

கீழைக் கோபுர வாயிலுக்கு எதிராக சிறுகுளமொன்று காணப்படுகிறது. கோபுர மொட்டையாக உள்ளது. இதன் கிழக்காக பதினாறு கால் மண்டபம் அமைந்துள்ளது. இதன் வடக்காக திருக்குளமும், நீராழி மண்டபமும் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனை வால்மீக முனிவார் இராட்சசு, பார்த்தசாரதி, சந்திரன், சூரியன், இந்திரன், பிரம்மன், வேதங்கள், காமதேனு, இயமன், இராமார், அகத்தியார், பிருங்கி முனிவர், போன்ற புண்ணியர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளதாக புராண வரலாறு கூறுகின்றன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், அட்டவதானி பூவை கலியாண சுந்தரயதீந்திரார் ஆகியோரால் பாடப் பெற்ற தலமாகும்.