அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில்

0
1987

அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில்

தொண்டை நாட்டில் அமைந்துள்ள தலம், திருமயிலை, தலபுராணத்தில் முக்கிய இடம் பெற்றுள்ள ஆலயம். இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும்,  பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

மூர்த்திச் சிறப்பு:

காரண ஆகப்படி அமைக்கப்பெற்ற திருக்கோயில், மயிலையில் உள்ள ஏழு சிவாலயத்தில் ஒன்று.  பழங்கால கல் வெட்டுகள் காணப்படும் ஆலயம். பொன், பொருளுக்கும் வரம் அளிக்கும் பொற்கொடியம்மன் எழுந்தருளிய தலம். தனஞ்செயன் என்ற அடியாரிடம் திரு விளையாடல் புரிந்த தலம். தனஞ்செயன் என்ற அடியாரிடம் திருவிளையாடல் புரிந்த தலம். இப்படி பல்வேறு பெருமைகள் வாய்ந்த தொன்மை மிக்க தலமாக விளங்குவது. சென்னை மயிலாப்பூர் ஸ்ரீபொற்கொடி உடனுறை ஸ்ரீ காரணீஸ்வரர் திருக்கோயில் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு பெருமை சேர்க்கும் முக்கியப் பகுதியாக விளங்குவது மயிலாப்பூர். மயிலையே கயிலை என்ற வழக்கிற்கு ஏற்ப, மயிலைக்கு சிறப்பு சேர்ப்பவர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆவார். அறுபத்து மூவர் விழாவிற்குப் பெருமை சேர்க்கும் திருமயிலையில் ஏழு சிவாலயங்கள் இருப்பது அதிகம் அறியப்படாத செய்தி. இதில் ஸ்ரீ கபா லீஸ்வரருக்கு அடுத்த நிலையில் மயிலைக்கு பெருமை சேர்ப்பவர் அருள்மிகு காரணீஸ்வரர் ஆவார்.

வரலாற்றுச் சிறப்பு :

சிந்து நதியின்  தென் பகுதியில் பத்மபுரி  என்ற நகரம் இருந்தது. இந்நகரில் பசுபதி என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். இவருக்கு தனஞ்செயன் என்ற மகன் இருந்தான். தனஞ்செயன் கல்வி, கேள்விகளில் மிகவும் சிறந்து விளங்கினான். சிவ பக்தியிலும் சிறந்தவனாக திகழ்ந்தான். இவனது வாலிப வயதில் முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. வாழ்வும் இனிதாகவே சென்று கொண்டிருந்தது. சிறிது காலம் சென்றதும், தனஞ்செயனின் மனைவி தடம் மாறினாள். இதனால் மனம் உடைந்த தனஞ்செயன் மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீ ஸ்வரனிடம் தஞ்சம் புக எண்ணினான். அதன்படியே ஸ்ரீ கபாலீஸ்வரரை தரிசித்து மனமுருகி வழிபட்டான். அடியாருக்கு அருள்பாலிக்கும் இறைவன், தனஞ்செயனுக்கும் அருள் வழங்கினார். அதன்படி, மயிலையின் வடதிசையில் ஒரு சிவாலயத்தை பிரதிஷ்டை செய்து தனஞ்செயன் வழிபட்டு வந்தான். அவர் பிரதிஷ்டை செய்த சிவாலயமே காரணீஸ்வரர் திருக்கோயிலாகும். வழிபாட்டில் மயங்கிய இறைவன் மீண்டும் காட்சி தந்தான். தவறிழைத்த மனைவியைக் கூட தண்டிக்காத அவனது குணத்தைப் பாராட்டி அவனை தனது திருவடியில் சேர்த்துக் கொண்டார் இறைவன்.

இப்படி அனைத்திற்கும் காரணமாக,  இச்சிவன் விளங்கியதால், இறைவன் காரணீஸ்வரன் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறான். மேலும் மயிலையில் இது புதன் தலமாகவும் கருதப்படுகின்றது. அதே போல காரண சித்தர் என்பவர் தினமும் இங்கு வழிபடுவதாகவும் கூறப்படுகிறது. இதே போல் இத்திருக்கோயிலுக்கு மற்றொரு காரணமும் உண்டு. பொதுவாக திருக் கோயில்கள் ஆகமங்களின் அடிப் படையிலேயே உருவாக்கப்படுவது 28 ஆகும். இதில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் காமிக ஆகமத்தின் படியும்,  காரணீஸ்வரர் திருக்கோயில் காரண ஆகமத்தின் படியும் அமைக்கபட்டுள்ளன. இந்த வகையில் காரண ஆகமத்தின் படி அமைக்கபட்டதால்,  இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீ காரணீஸ்வரன் என்ற திருப்பபெயரால் அழைக்கப்படுகிறான்.

புராணச் சிறப்பு

இத்தலத்தின் முழுமையான வரலாற்றினை மயிலைத் தல புராணம் என்ற நூலின் 36 பாடல்களின் வாயிலாக எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.

கல்வெட்டுச் சிறப்பு : அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்த தலமாகும். இத்திருக்கோயில் கல்வெட்டுகள் இதன் பழமைக்கு சான்றாக திகழ்கின்றன. தொல்பொருள் ஆய்வாளர்களால் இக்கோயில் கல்வெட்டுகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

ஆலய அமைப்பு : ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரம் வங்கக் கடலை வண்ணம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம் நந்திதேவர் என ஒருங்கே அமைந்துள்ளன. மகா மண்டபத்தின் முகப்பில் துவார கணபதி, பழனி ஆண்டவர், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி சன்னிதிகள் அமைந்துள்ளன. மகா மண்டபத்தின் உள்ளே நின்படி சர்வமங்கள் விநாயகர், ஸ்ரீ காரணீஸ்வரர் ஸ்ரீபொற்கொடியம்மன், நடராஜர், உற்சவமூர்த்திகள், சூரியன், பைரவர், சமய மற்றும் சந்தான குரவர்கள் என அனைவரையும் ஒரே இடத்தில் நின்று எளிதில் தரிசித்து விடலாம். காரணத்திற்கே காரணமான மூலவர் ஸ்ரீ காரணீஸ்வரர் எழிலான கோலத்தில் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகின்றான். பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் அன்னை ஸ்ரீபொற் கொடியாள் தெற்கு முகமாக, மயிலை கற்பகாம்பாள் போல நின்றக் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை

திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தேவையான பொன்னையும் பொருளையும் வாரி  வழங்கும் அன்னை ஸ்ரீ பொற் கொடியம்மன் ஒரு நன்னாளில் மனமுருக வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்து வேண்டு தலை தொடங்க வேண்டும். பிறகு 48 நாட்கள் ஸ்ரீ பொற்கொடியம்மனை தினமும் 9 முறை வலம் வந்து வழிபட வேண்டும். 48-ம் நாளன்று அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவோருக்கு அன்னையின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதே போல் இறைவனும் மனமுருகி வேண்டுவோர்க்கே மனமுவர்ந்து வரம் தரும் அருளாளனாக விளங்குகிறார்.

நடைதிறக்கும் நேரம்

திருக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-. 30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறக்கப்படுகிறது. இங்கு காலை மற்றும் மாலை ஆகிய இரு காலங்களில் பூஜைகள் தினமும் நடைபெறுகின்றது.

பிற சன்னதிகள்

ஆலயத்தின் கோஷ்ட தெய்வங்களாக நிருத்த கணபதி,  தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர் காட்சி தருகின்றனர். மகா விஷ்ணு இக்கோவிலில் இருப்பது இக்கோயிலின் பழமை தன்மைக்கு சான்றாக விளங்குகிறது. வெளிச்சுற்றில் ஸ்ரீ உண்ணாமலை உடனுறை ஸ்ரீ அண்ணாமலையார், வள்ளி தெய்வானை உடனுறை முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம் மற்றும் தனி சனி பகவான் சன்னதிகளும் ஒருங்கே அமைந் துள்ளன. நாகத்துடன் அரச மரமும் இவ்வாலயத்தில் உள்ளது.