அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

0
1535

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்த்
குருவாய் வருவாய் அருள்வாள் குகனே.

அமைவிடம்:

சென்னை மாநகரில் வன்னியத் தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.  சென்னை அண்ணா சாலையில் தியாகராய் சாலை எல்டாம்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சுமார் 150 அடி தூரத்திலேயே இத்திருக்கோயில் அமையப் பெற்றுள்ளது. மாம்பலம் புகைவண்டி நிலையத்திலிருந்து 4 கி.மீ துரத்தில் உள்ளது.

தல சிறப்பு:

இத்திருக்கோயில் தற்போது பாலசுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையிலேயே இது ஒரு சிவத்தலம் ஆகும். இவ்வாலயத்திற்கு சொந்தமாக உள்ள நிலங்கள் அருள்மிகு இராமலிங்ககேஸ்வரர் திருக்கோயில் என்ற பெயரிலேயே உள்ளன. மேலும் இத்திருக்கோயிலின் விநாயகர் சன்னதிக்கு எதிரே உள்ள தெரு இராமலிங்கேஸ்வரர் தெரு என்று தான் இன்று வரை அழைக்கப்படுகின்றது.

மேலும், இங்கு உள்ள விநாயகர் சன்னதி, ஈஸ்வரன் சன்னதி, அம்பாள் சன்னதி, நடராஜர் சன்னதி, சுப்ரமணியர் சன்னதி ஆகியவை இது ஒரு சிவன் கோயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.  இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியர் சன்னதி நிர்மானிக்கப்பட்டு புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என்று மக்களால் அழைக்கப்பட்டு தறபோதும் இந்த பெயரிலேயே இருந்து வருகிறது.

நவகிரக சன்னதி, சனீஸ்வரர் சன்னதி, துர்க்கை சன்னதி ஆகியவை உள்ளன. அருள்மிகு சுப்ரமணியர் வள்ளி தெய்வயானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தென் சென்னையில் உள்ள முருகன் திருத்தலங்களில் இது முக்கியமான திருத்தலமாகும்.

நடை திறந்து இருக்கும் நேரம்: திருக்கோயில் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.

பூஜை காலம்:

இத்திருக்கோயிலில் 4 கால பூஜைகள் நடைபெறுகிறது.

1) காலசந்தி பூஜை –  காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை

2) உச்சிகால பூஜை காலை 11.00 மணிக்கு

3) சாயரட்சை பூஜை – மாலை 5.00 முதல் 6.00 மணி வரை

4) அர்த்தசாம பூஜை – இரவு 9.00 மணி முதல் 9.30 மணி வரை

முக்கிய திருவிழாக்கள்: இத்திருக்கோயிலில் கீழ்க்கண்ட திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன,

1) மாதாந்திர கிருத்திகை: ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் அன்று சுப்பரிமணியர் வீதி உலா நடைபெறும்.

2) விநாயகர் சதுர்த்தி: ஆவணி சுக்ல சதுர்த்தி விநாயகர் வீதி உலா உண்டு.

3) சித்திரா பௌர்ணமி: சித்திரை மாதம் பௌர்னமி திதியன்று புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

4) கந்தசஷ்டி: இத்திருக்கோயிலின் திருவிழாக்களில் கந்த சஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றன. கந்த சஷ்டியில் யாக சாலை பூஜை, வள்ளி தெய்வயானை திருமண உற்சவம், லட்ச்சார்ச்சனை, சுவாமி வீதி உலா புறப்பாடு, 10 நாட்கள் இன்னிசை கச்சேரிகள் என்று சிறப்பாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகின்றன.

5) ஆருத்ரா தரிசனம் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று முதல் நாள் இரவு மஹா அபிஷேகமும் காலை 6.30 மணிக்கு நடராஜர் சிவகாமி அம்மாள் அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட விமானப்பட்டறையில் வீதிஉலா வருவது சிறப்பாக இருக்கும்.

6) மாணிக்க வாசகர் உற்சவம்: ஆருத்ரா உற்சவத்திற்கு முன்னதாக 10 நாட்கள் மாணிக்க வாசகர் உற்சவம் நடைபெறுகின்றது.

7) தனூர் மாதம் பூஜை: மார்கழி மாதம் முழுவதும் காலை 6 மணிக்கே கோயில் திறந்து தானூர் மாத பூஜை நடைபெறுகின்றது.

8) பிரதோஷம்: ஒவ்வொரு மாதமும் பிரதோஷ திதி நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகமும், உள்புறப்பாடும் சிறப்பாக நடைபெறுகின்றது.

பிராத்தனை சிறப்பு: திருமணம் ஆகாதவர்கள் திருக்கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும், என்பதும், பிரதோஷ சமயங்களில் சிவனை இத்திருத்தலத்தில் வந்து அபிஷேகம் மற்றும் புறப்பாட்டில் கலந்து கொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.

வழித்தடம்: இத்திருக்கோயிலுக்கு வருவதற்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 23சி பேருந்தில் ஏறி வானவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சுமார் 150 அடி தூரத்தில் திருக்கோவில் வந்தடையலாம். பாரிமுனையில் இருந்து தாம்பரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் வானவில் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும். இந்த வானவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எளிதில் திருக்கோவில் வந்தடையலாம்.