திருமண வரம் தரும் நித்திய கல்யாணப்பெருமாள்

0
1309

திருமண வரம் தரும் நித்திய கல்யாணப்பெருமாள்

ல்லறமல்லது நல்லறமன்று என்பது நமது நாட்டு மக்களின் நம்பிக்கையும் கொள்கையும் ஆகும். அன்பும், அறமும், பண்பாகவும், பயனாகவும், அமைகிற இல்வாழ்க்கை நெறி நின்று வையத்தில் வளமாக, நலமாக, வாழ்தலே பிறவியின் நோக்கமுமாகும்.

அத்தகைய அரிய இல்லற வாழ்க்கையை வேண்டி ஆண்டவன் அடி தொழுதால், அவன் அருள் கிட்டும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.

மக்களின் மனக்குறைகளை நீக்கி மகத்தான வரங்கள் வழங்கும் மங்கலத் திருத்தலங்கள் பல நமது நாட்டில் உள்ளன.

வைணவ திவ்விய தேசங்கள் நூற்றியெட்டில் ஒன்றான திருவிடந்தை திருத்தலம் திருமணத் தலமாகவும் திகழ்கிறது. சென்னையில் இருந்து 42 கி.மீ தொலைவில் உள்ள இந்தக் கோயிலில் மூலவராக ஆதிராகவப் பெருமாள் என்னும் லட்சுமி வராகப் பெருமாள் எழுந்தருளி உள்ளார். உற்சவரின் பெயர் நித்திய கல்யாணப் பெருமாள்.

மாலவன் வராக உருவெடுத்து,  இங்கு வந்ததன் வரலாறு என்ன? நித்திய கல்யாணப் பெருமாள் என்று உற்சவ மூர்த்தி பெயர் பெற்றதன் காரணம் என்ன?

பண்டைக் காலத்தில் திருவிடந்தை வாமகவீபுரி என்று வழங்கப்பட்டது.

மேகநாதன் என்ற அசுரனின் மகனான பலிச் சக்ரவர்த்தி என்பவன் நீதிநெறி தவறாமல் உலகை நெடுங்காலம் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் அறம் தழைத்தது,  அமைதி தவழ்ந்தது.

நண்பர்கள் உருவில் அவனுக்குச் சோதனை ஏற்பட்டது. அவன் நண்பர்களான மாலி, மால்யவன், சுமாலி என்ற மூவரும் தேவர்களை எதிர்த்து போரிட்டனர். போரில் தோல்வி அடைந்ததால், நண்பன் பலியை நாடி அவனிடம் அடைக்கலம் வேண்டினர். நண்பர்களுக்காக பலிச் சக்ரவர்த்தி, தேவர்களை எதிர்த்துப் போர் செய்ய நேரிட்டது.

இந்தக் குற்றத்துக்காக பலியைப் பாவம் பற்றியது. இந்தப் பாவம் நீங்குவதற்காகத் திருவிடந்தையில் பலிச் சக்ரவர்த்தி பல காலம் தவம் புரிந்தான்.

பலியின் தவத்தில் மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு வான்முகிலென வரங்களை வழங்கும் வராக அவதாரம் எடுத்து அவன் முன் தோன்றினார். அவன் வேண்டிய நல்வரங்களை விருப்புடன் அளித்தார்.

கால்வர் என்ற முனிவர் தன் மனைவியுடன் இல்லறம் நடத்தி வந்தார். அருட்செல்வம் மட்டுமின்றி அவர்களுக்கு மக்கட்செல்வமும் பெருக ஆரம்பித்தது. மொத்தம் 360 பெண் குழந்தைகள் பிறந்தனர். பெண்கள் திருமண வயதை அடைந்ததும் அவர்களுக்கு மணம் செய்ய முனைந்தார் கால்வ முனிவர்.

வாமகவீபுரிக்கு வந்து இறைவனை மனமுருக வேண்டினார். உள்ளம் இரங்கிய இறைவன் காஸ்யப கோத்திரத்தில் பிறந்த ஓர் அந்தண இளைஞராக வந்தார்.

முனிவரின் முதல் மகளை மணம் புரிந்து கொண்டார். புது மணத்தம்பதி, திருவிடந்தை கோயிலுக்குச் சென்று வழிபடும் போது கருவறையினுள் மறைந்து காணாமல் போய் விட்டனர்.

இதே முறையில் கால்வ முனிவரின் அனைத்துப் பெண்களையும் மணந்து  கொண்ட  மாயவன்,  அவர்களுடன் கருவறைக்குள் சென்று மறைந்து விட்டார்.

மனம் வருந்தினார் மாமுனிவர். தன் 360 பெண்களும் மருமகன்களும், மறைந்து போனது எவ்வாறு என்பதை அறிய எண்ணினார். திருவிடந்தைக் கோயில் கருவறைக்குள் நுழைந்தார் கால்வர். அங்கே அவர் கண்ட காட்சி.

மகாவிஷ்ணு, வராக மூர்த்தியாக 360 பெண்களையும் தன் தொடையில் அமர்த்திக் காட்சியளித்தார்.

பிறகு, அவர்கள் அனைவரையும் ஓர் உருவாக ஆக்கி, மகாலட்சுமியாக தன் இடப்புறத்  தொடை மீது அமர்த்தியவாறு அற்புதக் காட்சி அளித்தருளினார்.

இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், இன்றும் இந்தக் கோயிலில் 360 நாட்களும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. இதனால் இறைவன், மணவாளப் பெருமாள் என்றும், வடமொழியில் நித்திய கல்யாண சுவாமி என்றும் பெயர் பெற்றார்.

கருவறையில் உள்ள இறைவன், ஆதிவராகப் பெருமாள் என்றும், அவன் தொடை மீது இருத்தியுள்ள இறைவி அகிலவல்லித் தாயார் என்றும் அழை க்கப்படுகின்றனர்.

உற்சவரான நித்திய கல்யாணப் பெருமாள், தாடையில் பொட்டுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

திருவிடந்தை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை என்று திருமங்கை ஆழ்வாரால் குறிப்பிடப்படுகிறது.

திருவாகிய மகாலட்சுமியை இடப்பக்கத்தில் ஏந்தி இருப்பதால், இந்தத் தலம் திரு இட எந்தை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

திருவிடந்தைக் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்துள் நுழையும் முன்னர் அழகான திருக்குளம் நம்மை வரவேற்கிறது. திருக்குளத்தைச் சுற்றி அடர்ந்திருக்கும் மரங்களில் அடைந்திருக்கும் பட்சிகள் அந்தி நேரத்தில் மென்குரலில் தங்களது குஞ்சுகளை நலம் விசாரித்து உணவூட்டுகின்றன.

கோயிலின் முதல் திருச்சுற்று, அர்த்த மண்டபத்துடன் கருவறையை அடுத்துள்ளது.

இந்த திருச்சுற்றில் பன்னிரு ஆழ்வார்கள். ராமானுஜர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.

மகாமண்டபத் தூண்களில் வைகுண்டவாசியாகவும், ஆலிலைக் கண்ணனாகவும், பத்து அவதாரங்களாகவும் காட்சி தருகிறார் பெருமாள்.

இரண்டாம் திருச்சுற்றில் கோமளவல்லித் தாயார். ஆண்டாள், அரங்கநாயகித் தாயார், ரங்கநாதர் ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன. மூன்றாம் திருச்சுற்றின் வடபுறம் ஊஞ்சல் மண்டபம் உள்ளது.

திருமுகமானது வனப்பு மிகுந்த தேவியை நோக்கியவாறு உள்ளது. இறைவன் இடப்புறம் ஏந்தியுள்ள தாயார், வலக்கையில் தாமரை மலர் ஏந்தியுள்ளாள்.

இடக்கை,  இறைவன் தொடை மேல் கூடிய வலம்பிக் முத்திரையுடன் காணப்படுகிறது. அன்னையின் எழில் முகம் அடியவரை நோக்கி இன்னருள் புரிகிறது.

கருவறையின் தென்புறம் உள்ள கணபதி பிரசன்ன கணபதியாக நின்ற நிலையில் காட்சி தருகிறார். திருமால் அங்கு தென்புறத்தில் அச்சுதனாக அனைத்து அலங்காரங்களுடன் அருள் புரிகிறார்.

வடபுறத்தில் பொலிவுடன் திகழும் விஷ்ணு சிற்பத்தை அடுத்து நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை காணப்படுகிறாள்.

இடவெந்தை இறைவன், கதையால் ஆன திருமேனி கொண்டவர். ஆகையால் திருமஞ்சனம் நடை பெறுவதில்லை. சுவாமிக்குத் தைலக் காப்பு பூசி வழிபடுவது வழக்கம்.

கருவறையில் திருமால் வராக வடிவில் அருள் பாலிக்கிறார். மேல் இரு கரங்களில், வலது கரத்தில் சக்கரமும், இடது கரத்தில் சங்கும் தாங்கியுள்ளார்.

கீழ் இரு கரங்களில் இடக்கரம் நிலமகளின் பாதங்களைத் தாங்கியும், வலக்கரம் தாயாரை அள்ளியெடுத்து அனைத்தும் காணப்படுகின்றன.

ஆடை அணிகலன்கள் பூண்டு, தலையில் மகுடம் தாங்கி, திருநெற்றியில் நாமம் தரித்து, வராக வடிவில் வரம் தரும் வள்ளலாக விளங்குகிறார் பெருமாள்.

திருவிடந்தைத் திருத்தலத்தில் மணவாளப் பெருமாளாகிய நித்திய கல்யாணப் பெருமாள் தன்னை நம்பிக்கையுடன் நாடி வருவோருக்குத் தக்க வயதில் மணவிழா நடக்க நல்லருள் நல்கி வருகிறார்.

அது மட்டுமல்லாமல், இந்தப் பெருமாள், தன்னை நாடி வந்து தாரித்து, துதித்து, ஆராதிக்கும் பக்தர்களின் பூர்வ ஜன்ம வினைகளால் ஏற்படும் இன்னல்களையும் களைகிறார் என்பது திருமங்கையாழ்வாரின் திருவாய்மொழி.

திருவிடந்தை நாராயணனைத் துதிப்போம். நலம் பல பெறுவோம். தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் திருவிடந்தை செல்லும்.

தரிசிக்கும் நேரம்: காலை 07.30 முதல் பகல் 12.00 மணி வரை.
மாலை 04.30 முதல் இரவு 08.30 மணி வரை.