பட்சி தீர்த்தம் எனும் திருக்கழுக்குன்றம்

0
1997

பட்சி தீர்த்தம் எனும் திருக்கழுக்குன்றம்

இறைவன் திருப்பெயர்:

வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்) பக்தவசலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்) இறைவியார் திருப்பெயர் சொக்கநாயகி (மலைமேல் இருப்பவர்) திருபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)

தல வரலாறு:

இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் “வேதகிரி” எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்ப இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள், மலைமேல் ஒரு கோயில், ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில், தாழ்க்கோயில் என்றழைக்கப்படுகிறது.

500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு “பட்சிதீர்த்தம்” என்றும் திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று. தாழ்க்கோயில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும் அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சிறப்புகள்:

இத்தலத்திற்கு வரும் வடநாட்டு யாத்திரிகர்களுக்குப் பட்சி தீர்த்தம் என்று சொன்னால்தான் புரியும். மலை மீது ஏறிச்செல்ல நன்கு அமைக்கப்பட்ட மலைப்பாதை செம்மையான படிகளுடன் உள்ளது. இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது. இங்குள்ள சங்கு இம்மலையை வலம் வருபவரின் உடற்பிணி நீங்கும்.

மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம். அப்பெருமான் வாக்கிலும்,திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. தாழக்கோயில் கல்மண்டபத்தின் மீது செங்கலால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில், கோயிலுக்கு வெளியே ஐந்து தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை “சங்கு” பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. வலம்வரும் போது நந்தி தீர்த்தத்தையடுத்து, அலுவலகச் சுவரில் அழகான அஷ்டபுஜ துர்கையின் சிற்பம் உள்ளது. இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. பிரகாரத்தில் ஆத்மநாதத் சந்திதி – பீடம் உள்ளது. பாணம் இல்லை, எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது. அம்பாளுக்கு மார்பில் சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.

ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாள்தோறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது.

இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார். கருவறை கஜப்பிராஷ்ட அமைப்புடையது. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர், பாண்டியர், ராஷ்டி ராகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலம் “உலகளந்த சோழபுரம்” என்று குறிப்பிடப்படுகிறது.