பழமுதிர்ச்சோலை
பழமுதிர்ச்சோலை மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று எனக் கருதப்படுகிறது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். விஷ்ணு கோயிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
தல வரலாறு
ஔவையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி, அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைபுடன், வயிறு பசிக்கவும் செய்தது.
அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், “குழந்தாய்… எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?” என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், “சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? “ என்று கேட்டார்.
சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டே, விளையாட்டாக “சுடாத பழத்தையே கொடுப்பா…” என்று கேட்டுக்க, ”சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ” என்று கூறி, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறு
வனாகிய முருகப் பெருமான் உலுக்க, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், “என்ன பாட்டி… பழம் சுடுகிறதா?” என்று கேட்டார்.
சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானிடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, “சிறுவனே.. நீ யாரப்பா? “ என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார். முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, “உயிர்களின்
மீது “உலகப்பற்று’ என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படு
கிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.
அதிசய நூபுர கங்கை
பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய் திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.




