எங்கும் எப்போதும் மாதவா

0
1130

எங்கும் எப்போதும் மாதவா

அமைவிடம்:

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் சமஸ்கிருத கல்லூரிக்கு கிழக்குப்புறத்திலும், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு வடக்குப் பக்கத்திலும், சென்னை வானொலி நிலையத்திற்கு மேற்கிலும், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலைக்குத் தென்புறத்திலும் அமைந்துள்ளது.

திருத்தலச் சிறப்பு:

தற்போதுள்ள இத்திருக்கோயிலின் கட்டிட அமைப்பு சுமார் 800 ஆண்டுகளுக்கு  முற்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் முதலாழ்வார்கள் காலத்திலேயே இத்திருக்கோயில் இருந்து உள்ளது. பாடல்கள் பெறாத பல புராதன வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாக இத்திருக்கோயில் இருந்துள்ளது. இத்திருத்தலம் தோன்றிய விதம்,  இறைவன் இங்கு வந்து குடிகொண்டு அமிர்தவல்லி தாயாரை மணம் புரிந்தது. மயிலாப்பூர் தோன்றிய விதம், பேயாழ்வார் அவதார வைபவம் ஆகிய புராண வரலாற்றை பிரம்மாண்ட புராணத்தில் “மயூரபுரி மஹாத்மியம்“ என்னும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதனில் இந்த இடம் “மாதவபுரம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது. கலியுகத்தில் கலிதோஷமில்லாது தவம் செய்யச் சிறந்த இடம் எது? என ஸ்ரீமந்நாராயனை வினவிய வேத வியாசருக்கு ப்ருகு முனிவர் ஆசிரமம் அமைந்த இந்த மாதவபுரமே சிறந்தது என அருளியதாகக் கூறுகிறது.

ஆழ்வார்கள் பன்னிருவருள், முதலாழ்வார்கள் மூவரில் மூன்றாமவரான ஸ்ரீ போயாழ்வார் மாதவபுரம் என அழைக்கப்பட்ட இத்திருக்கோயிலின் தென்கிழக்கே உள்ள “மணிகைரவம்“ என்னும் வாவியில் அவதரித்தார் என்பது பிரம்மாண்ட புராணத்தில் உள்ள செய்தி ஆகும். அவர் தினந்தோறும் ஸ்ரீ மாதவனையே வணங்கி வழிபட்டார்.

1956ம் ஆண்டில் இத்திருக்கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள சமஸ்கிருத கல்லூரியில் காஞ்சி மாமுனிவர் பெருந்தகை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தங்கியிருந்த இரண்டு திங்கள் காலத்திலும், இத்திருத்தலத்தல் அமைந்துள்ள சந்தான புஷ்கரணி திருக்குளத்தில் நீராடி பெருமானை வழிபட்டார் என்பது இத்திருக்கோயிலுக்கு மேலும் ஒரு சிறப்பு. இத்தலத்தின் சிறப்பனை உணர்ந்த அவரே பிரம்மாண்ட புராணத்தில் உள்ள மயூரபுரி மகாத்மியம் ஓலைச்சுவடியாக இருந்ததை 1957ல் அச்சேற்றியுள்ளார். இந்த புராதனமான புராணம் உள்ள சிறப்பு மயிலாப்பூரில் உள்ள இந்த பெருமாள் கோயிலுக்கு மட்டுமே உண்டு.

தீர்த்தம்:

இத்திருக்கோயில் இப்போது இருக்கும் இடத்தில் ப்ருகு முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்தது. ப்ருகு முனிவரின் ஆசிரமத்தில் இருந்த திருக்குளம்தான் “சந்தான புஷ்கரணி என்ற சிறப்போடு விளங்குகிறது. மாசி மாதத்தில் மக நட்சத்திரம் கூடிய சுக்லபட்சத்துப் பௌர்ணமித் திதியில் சகல தீர்த்தங்களும் இத்திருக்குளத்தை வந்தடையும். அப்போது அதில் நீராடி ஸ்ரீ அமிர்தவல்லி உடனுறை மாதவப்பெருமானை வணங்கி வழிபட்டோருக்கு புத்திரப்பேறு கிட்டும் என பிரம்மாண்ட புராணத்தில் மயூரபுரி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. ஆண்மைக் காலங்களில் அந்நாளில் இங்கு வந்து இறைவனை வணங்கி பலர் இப்பேற்றைப் பெற்றுள்ளதாக இங்குள்ள பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார்:

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டபோது தேவர்கள் எல்லோரும் சேர்ந்து ஸ்ரீமந் நாரயணனை வைகுண்டத்தில் நேரில் வணங்கி அசுரர்களை அடக்கி தங்களுக்கு நிரந்தர அமைதி ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். இதை பெருமாள் ஏற்று, நானும் இலக்குமியும் பூலோகத்தில் அவதரித்து உங்களுடைய ராஜ்ய பரிபாலனத்திற்கு அசுரர்களால் இடையூறு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்கிறோம், என்று அவர்களுக்கு உறுதி வழங்கினார். பிறகு பூலோகத்தில் அவதாரம் செய்து, அமிர்தத்தை கடையும்பொழுது ஸ்ரீ மஹாலட்சுமியானவள் தோன்றினாள். அவரை பெருமாள் மயூரபுரி கேஷத்தலத்தில் உள்ள ப்ருகு முனிவர் ஆசிரமத்திற்கு அனுப்பிவைத்தார். இத்திருத்தலத்தில் மஹாலட்சுமி ஸ்ரீ அமிருதவல்லித் தாயாராக பக்தர்களுக்கு அருள்புரிகின்றார் பிள்ளைப்பேறு வேண்டித் தவம் புரிந்த ப்ருகு முனிவரின் குறை நீக்க மகாலட்சுமி அவரது ஆசிரமத்தை அடைந்து அழகான கன்னிகையாகத் தோன்ற முனிவரும் அக்குழந்தையை அமிர்தத்தோடு தோன்றி அருளிய லட்சுமி ஆதலால் அமிருதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்தார்.

ஸ்ரீ மாதவனாக ஸ்ரீமந்நாராயணன் முனிவரின் ஆசிரமம் அடைந்து அமிர்தவல்லியை மணம் புரிய வேண்ட, முனிவரும் மாதவபுரம் ‘என்று இந்நகரைப் பெருநகராக்கி பங்குனி உத்திரத்தில் திருமணம் முடித்து வைத்ததாகப் புராணம் கூறுகிறது.

பாற்கடலில் தோன்றிய அமிர்தவல்லியாகையால் திருமணப் பிரார்த்தனைக்காக கல்கண்டு, குங்குமப்பூ சேர்த்த பால் நிவேதனம் செய்து சேவார்த்திகள் கைப்படவே வழங்கும் வழக்கம் இத்திருக்கோயிலில் உண்டு.

தாயாருக்கு 9 நாள் நவராத்திரி உற்சவமும் பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண உற்சவமும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பிள்ளை வேண்டுவோர் செய்யும் பிரார்த்தனை ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

கல்யாண மாதவன்:

இக்காலத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் திருமகளும் மணமகளும் உடன் இருக்க, ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் உட்கார்ந்த நிலையில் காட்சி தருகிறார். கல்யாணத் திருகோலத்துடன் இருப்பதால் இவருக்கு “கல்யாண மாதவன்” என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. திருமண வரம் வேண்டுவோர் ‘பிரார்த்தனை நிறைவேற்றும் பெருமாள் என வழங்கப்படுகிறார்.

அருளாளர் ஸ்ரீபேயாழ்வார்:

முதலாழ்வார்களில் மூன்றாமவரான ஸ்ரீபேயாழ்வார் இத்திருக்கோயிலுக்கு அருகிலேயே உள்ள “மணிகைரவம்” என்ற வாவியில் செவ்வல்லிப்பூவிலே ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் திருமாலின் “நந்தகம்” என்னும் வாளின் அம்சமாக அவதரித்தார். அவர் அருளிச் செய்த அந்தாதியாகிய நூறு பாசுரங்களும் மூன்றாம் திருவந்தாதி எனப் பெயர் பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஓர் அங்கமாக அமைந்துள்ளது. இவருக்குத் “தமிழ்த் தலைவன்” என்னும் பெயருண்டு. எங்கும் இல்லாத பெருமையாக ஸ்தலாதிபதியாகிய இத்தலத்தின் தாயார் சன்னதித் தூண்களில் பல்வேறு வாகனங்களில் காட்சி தரும் வகையில் அழகான புடைப்புச்சிற்பங்களாக செதிக்கியுள்ளார். இது பேயாழ்வாருக்கும் இத்திருக்கோயிலுக்கும் உள்ள பினைப்பை விளக்குவதாக அமைந்து உள்ளது. பேயாழ்வாருக்கு இதே போல் வேறு எங்கும் சிறப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.